குழப்பத்தில் டெலோ

ஆசனப்பங்கீடு தொடர்பில் கொழும்பில் எத்தகைய சந்திப்புக்களை நடத்தினாலும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லையென்ற முடிவில் மாற்றமில்லையென டெலோ மத்திய குழுவின் பெரும்பான்மை முடிவாக உள்ளது.

இந்நிலையில் உள்ளுராட்சி சபை தேர்தல் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக டெலோ அறிவித்திருந்த போதும் மதியம் வரை அத்தகைய சந்திப்பேதும் நடந்திருக்கவில்லை.

இந் நிலையில் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக செல்லம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக செல்வம் அடைக்கலநாதன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனின் இம் முடிவு ரெலோவின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இரவு ரெலோவின் தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி சிறீகாந்தா ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையில்...

உள்ளுராட்சி தேர்தல் கூட்டு தொடர்பில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் அமைப்புடன் பேச்சுகளை நடத்தியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ள நிலையில் இரா.சம்பந்தனும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சிறீகாந்தா தெரிவித்தார்.

நேற்று அரசியலில் இறக்கப்பட்ட சிவமோகன் முதல் சாந்தி சிறீஸ்கந்தராசா வரை பாடம் கற்பிப்பதற்கு டெலோ தாழ்ந்து போகவில்லையென சீற்றத்துடன் டெலோ முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசியப் பேச்சுக்கள் நடத்தியமை தொடர்பாக தமக்கு தெரியாதென சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.