சாரதி அனுமதிபத்திரம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ள விடயம்

சாரதி அனுமதிபத்திர முறைமையை மாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி பரிந்துரை இன்று அறிவிக்கப்படவுள்ளது.

சாரதி அனுமதி பத்திர வழங்கலின் போது இடம்பெறும் முறைகேடுகளை குறைக்கும் நோக்கில் அமைச்சரவை வழங்கிய யோசனைக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தவிசாளர் சிசிர கோதாகொட, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழு இறுதியாக சாரதி பயிலுனர் பாடசாலைகளில் கற்பிக்கும் முறைமையை சீர்திருத்த யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த குழு வழங்கும் நிர்ணயங்களை நிறைவேற்ற சாரதி பயிலுனர் பாடசாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் அவர்களது பயிலுனர் அனுமதிபத்திரம் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான சபையின் தவிசாளர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் சாரதி அனுமதி பத்திரங்களை பிறிதொரு நிறுவனத்தின் ஊடாக வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்களின் வெற்றிடமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.