விசேட அதிரடி படையினருக்கே இந்த நிலையா...?

பசறை – எல்டொப் தோட்டத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட இயல்பற்ற நிலை குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சுற்றிவளைப்பை மேற்கொள்ள விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதிக்கு சென்றபோதே இந்த இயல்பற்ற நிலைமை தோன்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசறை – ஆகரதன்ன காவல்துறை விசேட அதிரடிப் படை தலைமையகத்தின் அதிகாரிகள் 8 பேர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது எல்டொப் தோட்டத் தொழிலாளி ஒருவர் உட்பட பொதுக்கள் சிலர், காவல்துறை விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

40 பேர் கொண்ட குழுவினரால், கல் மற்றும் தடிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் உட்பட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை விசேட அதிரடிப்படைப் பிரிவு அதிகாரி ஒருவரும், பிரதேச வாசி ஒருவரும் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி காவல்துறை அதிகாரியின் தலைமையின்கீழ் மூன்று விசாரணை குழுக்கள் ஊடாக சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.