இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வேடுவர்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கப்போகும் வேடுவர்!

மஹியங்கனை தம்பான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேடுவர் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என வேடுவத்தலைவர் வன்னியலெந்தோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று விஷேடநேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக வேடுவ மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

இதனால் பிரதேசசபை, மற்றும் நாடாளுமன்றத்தில் வேடுவமக்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் வேடுவ குலத்தில் உள்ள படித்த இளைஞர் ஒருவரை அரசியலில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேடுவ மக்களுக்காக, வேடுவ இளைஞர் ஒருவரை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கவுள்ளதாக குறிப்பிட்ட வன்னியலெந்தோ, அந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெறுவாராயின் அது வேடுவமக்களுக்கே கிடைத்த வெற்றியாக கருதப்படும் எனவும் கூறியுள்ளார்.