பதவி விலகுகிறாரா ரணில்!! காரணம் இதுதானாம்!!

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இன்று மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் கூட்டரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதோடு, பிரதமர் பதவி விலகவேண்டுமென்ற அழுத்தமும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக தேர்தல் முடிவு வெளியான பின்னர் நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க விரும்பும் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி பதில் கூறாத அதேவேளை, பின்னர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது பிரதமர் பதவியை ரணில் துறக்கவேண்டுமென சு.க. உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்று பிரதமருக்கும் ஐ.தே.க.வின் உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க வேண்டுமென்பதே கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடாக காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பை தொடர்ந்து பிரதமர் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஆட்சியமைப்பதற்கான பலத்தை ஐ.தே.க கொண்டிராத நிலையில், சு.க.வின் உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவையாக உள்ளபோதும், 105 நாடாளுமன்ற உறுப்பினர்களையே ஐ.தே.க கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை ஐ.தே.க. கோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நெருக்கடி நிலையில் ரணில் பதவி விலக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய இன்றையதினம் தனது பதவி விலகலை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்குவதற்கும், அதின ஊடாக அதிக பலத்தை ரணில் பெறுவதற்குமான நடவடிக்கைகள் வாய்ப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.