குழப்பமடையும் கொழும்பு அரசியல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று இடம் பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி புதிய பிரதமர் நியமிப்பு தொடர்பான ஆலோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரபலம் ஒருவரை புதிய பிரதமராக்கும் முடிவுகள் குறித்து குறித்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் போது சுதந்திரக்கட்சியில் புதிய அமைச்சர்களை நியமிக்க வழங்கப்பட்ட ஆலோசனையை அடுத்து, சுதந்திரக்கட்சியில் அமைச்சர்களை தன்னால் நியமிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பதவியை நீக்கிவிட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச அல்லது சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவரை பிரதமராக்கும் ஆலோசனைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக்கட்சிக்கு சாதகமாக அமையாததனைத் தொடர்ந்து அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்களளும், குழப்பங்களும் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.