கொழும்பு அரசியலில் கட்சித் தாவல் ஆரம்பம்?

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு தீர்க்கமான சந்திப்பாக அமைகிறதோடு அதிரடி தீர்மானங்களும் எடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பல அமைச்சர்களும், உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகிற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் இணைவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

இதேபோல சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியிலிருக்கும் பொலன்னறுவை மாவட்ட இளம் அமைச்சர் ஒருவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிப்பதற்கான பேச்சு முற்றுப்பெற்றிருப்பதாக அக்கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இப்படியான தருணத்திலேயே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதுஇப்படியிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இடையிலான மற்றுமொரு சந்திப்பு கொழும்பில் இன்று அல்லது

நாளை நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் உயர்பதவிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவரும்படி அக்கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்களும், இளம் உறுப்பினர்களும் கட்சியின் தலைமைபீடத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையிலேயே இந்த சந்திப்பும் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.