பிரதமர் பதவி கருவுக்கு? ஐ.தே.க தலைவர் பதவி சஜித்துக்கு? அரசியலில் பரபரப்பு

இன்று மாலை 3 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் அறிவிக்கும் எவ்வேளையிலும் வருவதற்கு தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி பாராளமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே கட்சி தலைமைப் பீடத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சபாநாயகர் கருஜயசூரியவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடாது எதனையும் செய்ய முடியாது என கருஜய சூரிய தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதுடன் கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி இன்று மாலை 3 மணியளவில் இறுதி தீர்மானம் தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.