கருணா - பிள்ளையான் இணைவு

எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இனத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதை அடுத்து, அக்கட்சியின் வெற்றியினை கொண்டாடும் முகமாக கிரான் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யதிருந்த வெற்றிக்களிப்பு நிகழ்வில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்று நாம் கிரான் மண்ணிலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட்சி பெற்ற வெற்றியினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிகழ்வானது எமது கட்சியின் பிரதேச இளைஞர் அணியின் தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இவ்வெற்றியினை உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு உள்ளது. தற்போது இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜ.தே.கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி என்பன பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்ற போதும், அனைத்து சிங்கள மக்களும் வாக்களித்து எமது முன்னாள் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

அத்துடன் எமது கட்சியான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஏழு ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை எமக்கு பாரிய வெற்றியாகவே அமைகின்றது. எதிர்காலத்தில் எமது அரசியல் பயணத்தினை திட்டமிட்டுள்ளோம்.

அதாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் ஜெயம் என்னுடன் பேச்சுவார்ததை நடாத்தியிருந்தார்.

எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்று அது தொடர்பாக எனது கட்சியில் உள்ள அங்கத்தவர்கள் முன்னிலையில் பரிசீலித்து முடிவுகள் எடுக்கவுள்ளோம்.

எமது பிரதேசங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இதனை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சரியானமுறையில் பதிலடி கொடுத்து, எமது கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இணைந்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதைக் கூறிக்கொள்ள விருப்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.