பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கூட்டு எதிரணி குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் கண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடைலான மோதல் சம்பவத்தினை தொடர்ந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணி ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை சமர்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இவ்விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுவதால் அதற்கு கால அவகாசம் தேவையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.