தந்தையின் உயிரை காப்பாற்றியவருக்கு மகன்கள் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்

தந்தையின் உயிரை மீட்ட வைத்தியர் ஒருவரின் வீட்டில் நோயாளியின் மகன்கள் கொள்ளையிட்ட சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையை காப்பாற்றிய வைத்தியரின் வீட்டை உடைத்து, குறித்த நோயாளிகளின் மகன்கள் இருவர் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.

நோயாளியின் 18 மற்றும் 19 வயதான இரண்டு மகன்களை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு சகோதரர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள குறித்த இரண்டு இளைஞர்களும் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தண்டனை அனுபவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞர்களின் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும், அதன் போது கடுமையான அர்ப்பணிப்புடன் இந்த நபரை குறித்த வைத்தியரே காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியரின் குடும்பம் வீட்டில் இல்லாத அரை மணித்தியால இடைவெளியில் கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.