கொழும்பின் புற நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேக நபர்களான குழந்தையின் தாய் மற்றும் தந்தை இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

உயிரிழந்த ஆண் குழந்தையொன்றை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அவரது பெற்றோர் அடக்கம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த குழந்தை தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தையின் இறுதி சடங்கு நேற்று பிற்பகல் இவ்வாறு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தமையினால் குறித்த குழந்தை உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து அடக்கம் செய்ய முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் , மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , குறித்த இடத்திற்கு சென்ற காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குழந்தையின் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி , நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்ததன் பின்னர் , குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி , மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த குழந்தை ஆயுதமொன்றால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் , குறித்த குழந்தை பல முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.