இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை: ராஜித

இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை: ராஜித

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்கள் வாதம் முன்வைக்க அதற்கு பதிலளித்த அமைச்சர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பயங்கரவாதிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது நான் மட்டுமல்ல. பலரும் அறிந்த உண்மை எனத் தெரிவித்த ராஜித, அவ்வாறாயின் 1988 கலவரத்தில் உயிரிழந்த அனைவரும் ஜே.வி.பி. பயங்கரவாதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், ஜே.வி.பி. போன்றில்லை, விடுதலை புலிகள் என்பது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டதொரு அமைப்பு என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட. அதற்கு அவர்கள் சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினையா என கேள்வி எழுப்பியதுடன், அப்படியாயின், ஜே.வி.பி.-இன் விஜயவீரவிற்கும், பிரபாகரனுக்கும் இடையிலான வித்தியாசத்தை கூறுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவ்வாறாயின் சர்வதேசத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, இல்லை என பதிலளித்த அமைச்சர், சர்வதேசத்திடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டிய அவசியமே காணப்படுகிறது எனத் தெரிவித்தார்