வெளிப்படுமா மர்மங்கள்? குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் சிசிர மெண்டிஸ்

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும், கீத் நொயர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதிபொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிசிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று சுமார் 6 மணித்தியாலயங்கள் சிசிர மெண்டிசிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லசந்தவின் படுகொலை இடம்பெற்ற காலகட்டத்தில் சிசிர மெண்டிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டுவந்தார்.

குறித்த படுகொலையுடன் புலனாய்வுத் துறையினர் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதன் காரணமாகவே இவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.