பாவப்பட்ட பணத்தில் தொலைந்து போன பணத்தை தேடும் யாழ் பொலிஸார்

வடக்கு எதிர்க்கட்சி தலைவர் வீட்டில் போடப்பட்ட பணப்பையில் இருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார்.

அந்நிலையில் கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் , எதிர்க்கட்சி தலைவர் கோரிய பணத்தினை வழங்குவதற்காக கடந்த சில தினங்களாக பொதுமக்களிடம் ஒரு ரூபாய் வீதம் பணத்தினை சேகரித்து வந்தனர்.

வடமாகாண சபை அமர்வு நேற்றைய தினம் நடைபெற்று இருந்த போது சபைக்கு வந்த மாணவர்கள் தாம் எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கவென 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை சேகரித்து உள்ளோம். என கூறி, எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய அமர்வுக்கு சமூகம் அளிக்காத நிலையில் அதனை அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சரிடம் வழங்க முயன்றனர்.

அதனை அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சர் வாங்க மறுத்து விட்டனர். அந்நிலையில் “பாவப்பட்ட பணம் ” என எழுதப்பட்ட குறித்த பண பொதியினை கொக்குவிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவர்கள் வீட்டு வாசலில் பண பொதியினை கட்டி விட்டு சென்றனர்.

வீட்டு வாசலில் பொதி ஒன்று கட்டப்பட்டு உள்ளமையை கண்ட எதிர்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களான பொலிசார் யாழ். காவற்துறை நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள்.

அதனை அடுத்து அங்கு சென்ற காவற்துறையினர் பொதியினை மீட்டு ஆராய்ந்த போது பொதியினுள் 6 ஆயிரத்து , 37 ஒரு ரூபாய் குற்றிகள் காணப்பட்டன என காவற்துறையினர் தெரிவித்தனர்.