விஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது! மஹிந்தவின் பேச்சால் பரபரப்பு

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ச,

எனினும் அந்த கருத்துக்கு பின்னணியில் தற்போதைய தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, அரசாங்கம் முழு மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இந்த விடயம் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அரசாங்கத்தின் இயலாமையே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றமைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.