1224.6 மில்லியன் ரூபா செலவில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்மாண நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிட நிர்மாணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

இந்தப் பணிகள் 1224.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு 5 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதில் இரண்டாம் கட்டமாக அதன் 2ம் மாடியில் இருந்து 5ம் மாடி வரையில் நிர்மாணிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் 1224.6 மில்லியன் ரூபாவுக்கு பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.