புலிகள் பற்றி பேசாவிட்டால் வடக்கில் அரசியல்வாதிகள் அரசியல் செய்யமுடியாது

வடக்கு அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் பற்றி கதைக்காமல் அரசியல் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் தேர்தல் காலத்தில் விடுதலைப்புலிகளின் பாடல்களை பிரச்சார கூட்டங்களில் ஒலிக்கவிடுவது அவர்களை பற்றி பேசுவது அவர்களின் நினைவு சின்னங்கள் தொடர்பில் பேசுவது என்றே வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய தெரியும்.

வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்று தருகின்றோம். வேலை வாய்ப்புக்களை பெற்று தருகின்றோம். என அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். அது தொடர்பில் பேச மாட்டார்கள். வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க அவர்கள் முயல்கின்றார்கள்.

இங்குள்ள அரசியல் வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்கு பற்றி தெரியுமோ தெரியாது. பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள். இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டும் என முயற்சிப்பதில்லை.

தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்கன் டொலர்ஸ் செலவு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.

ஆனால் இன்று வடக்கில் எந்த விதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு உள்ளது ? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது ? எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை. என தெரிவித்தார்.