மன்னாரில் குடும்ப பெண்ணிடம் மோட்டார் நிறுவன ஊழியர்களின் அடாவடி

மன்னார் ஓலைக்கொடு பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக தள்ளி இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் ஓலைக்கொடு பகுதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரின் பாவனையிலிருந்த பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளினை நிறுவனத்தின் ஊழியர்கள் நிலுவைப்பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து வீதியில் வைத்து அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணுடன் வீதியிலிருந்து தர்க்கத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தனது பாவனையிலிருந்த மோட்டார் சைக்கிலினை தன்னிடமிருந்து வற்புறுத்தி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் இவ்விடம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தன்னைத்தள்ளி விட்டதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வவுனியாவிலுள்ள நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தினை தொடர்புகொண்டு வினவியபோது, கடந்த 4 மாதத்திற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிலின் நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை.

குறித்த பெண்கள் பாவிக்கும் மோட்டார் சைக்கிள் ஆண் ஒருவரின் பெயரில் உள்ளது எமது நிறுவனத்திற்கு நிலுவைப்பணமாக 44992.00 ரூபா செலுத்த வேண்டியுள்ளது. மூன்று மாதகாலத்திற்குள் நிலுவைப்பணத்தினைச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நான்கு மாதகாலத்திற்கு மேலாகியும் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை. இவ்விடம் குறித்து கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிலின் உரிமையாளரிடம் நேரில் சென்ற நிறுவனத்தின் முகாமையாளர், ஊழியர்கள் இவ்வாறு நிலுவைப்பணம் உள்ளதால் மோட்டார் சைக்கிள் திரும்பப் பெறவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தபோது இம் மாதம் 9 ஆம் திகதிக்குள் பணத்தைச் செலுத்துவதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை.

எனவே மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யும் முகவர்களிடம் குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்துமாறு எமது அலுவலகத்திலிருந்தும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு கடிதத்துடனேயே மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.