துப்பாக்கி தொடர்பாக அனந்தி மீது சுமத்திய குற்றசாட்டு! அதிரடி பதிலடி கொடுத்த அனந்தி

என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே, பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்க மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்குப் பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்

விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உரமூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையிலிருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை முடக்குவதற்காக பெண் என்று கூட பாராது சில நபர்கள் எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய அச்சுறுத்தல்களால் தான் நான் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அதனை விடுத்து பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கில் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அவ்வாறான துப்பாக்கி எதனையும் நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நான் துப்பாக்கியை பெற்றுக்கொண்டதாக கூறுபவர்கள் அதனை மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அதனை விடுத்து புனைகதைகளை கூறி மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற பற்றினை அழித்து விடலாம் எனக் கருதுவது பகற்கனவாகும். எமது தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அவ்வாறிருக்கையில் தற்போதைய சூழலில் தன் இன மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்து உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அi-டயாளமாக மக்கள் ஆணை பெற்ற என்போன்றவர்களை விமர்சித்து தமிழினத்தைக் கூறுபோட நினைப்பவர்களை எம் மக்கள் அடையாளம் காணவேண்டும்.

இவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக நடித்துக் கொண்டு அநியாய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களின் போலிப்பரப்புரைகளுக்குக் காலம் பதில் அளிக்கும். அத்தகையவர்களின் முகத்திரையை கிழித்து எம் உறவுகள் தக்க பதிலடியை வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

எனினும் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் குறித்த விடயத்தை நேற்று நடைபெற்ற சிறப்பு அமர்வில் கூறும் போது அமைச்சரின் பெயரைப் பாவிக்காது இங்குள்ள வடமாகாண பெண் அமைச்சர் என்றே விழித்து கூறினார். வடமாகாண அமைச்சர்களில் அனந்தி சசிதரன் மாத்திரமே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.