கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது.

தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும்.

தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாடல்களையோ எங்குமே காண முடியவில்லை.

அதென்ன எல்லோருமே வடக்கு மாகாண சபை பற்றி மட்டுமே கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்? கிழக்கு மாகாண சபைக்கும்தானே தேர்தல் வரவிருக்கிறது. ஏன் உங்களைப் போன்ற கருத்துருவாக்கிகள் அது பற்றி வாய்திறப்பதில்லை அந்தளவிற்கு கிழக்கு தமிழ் மக்கள் பொருட்படுத்த முடியாதவர்களாவிட்டார்களா என கேட்கின்றனர்.

இந்தக் கேள்விகள் மிகவும் நியாயமானவை. உண்மையில் கிழக்கு மாகாண சபை கடந்த வருடம் செம்படம்பர் மாதம் கலைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எவரும் கிழக்கு மாகாண சபை தொடர்பில் எங்கும் உரையாடியிருக்கவில்லை.

ஆனால் எதிர்வரும் அக்டோபர் மாதம் கலைக்கப்படவுள்ள வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் அனைவருமே பேசுகின்றனர். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அங்கும் கிழக்கு மாகாண சபை தொடர்பில் எவரும் பேசியிருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அண்மையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) உப தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன், இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வியாழேந்திரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கும் இடையில் வாக்கு வாதங்கள் இடம்பெற்றது. வியாழேந்திரனின் கேள்வி நியாயமானது. ஆனால் அந்தக் கேள்வி நியாயமாக ஆராயப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழலில்தான் கிழக்கு மாகாண சபை ஒரு தமிழ் முதலமைச்சரின் கீழ் இருக்க வேண்டும் என்னும் கோசம் மட்டக்களப்பில் வலுத்துவருகிறது. அங்குள்ளவர்களோடு உரையாடினால் அது சற்று காரம் கூடியதொரு வாதமாகவே தெரிகிறது.

கடந்த தடவை இடம்பெற்றது போன்று முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது. இம்முறை இதில் மாற்றம் தேவை என்பது அவர்களது வாதமாக இருக்கிறது. கிழக்கு தமிழர் ஒன்றியம் என்னும் அமைப்பு இந்த முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இவர்களது நோக்கம் கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடச் செய்வது.

இதன் மூலம் ஆகக் கூடிய ஆசனங்களை பெறலாம் என்பது இவர்களது கணிப்பு. அவ்வாறு ஆகக் கூடிய ஆசனங்களை பெறும் போது, அதனைக் கொண்டு முதலமைச்சரை தங்கள் வசப்படுத்தலாம் என்பது இவர்களது எண்ணம். ஆனால் இதிலுள்ள சிக்கல் இதனைப் போன்ற தந்திரோபாயங்கள் தொடர்பில் ஏனைய சமூகங்களும் சிந்திக்க முடியும். இது ஒரு புறமிருக்க கிழகிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் கொண்டுவருவது என்பதும் ஒரு முயல்கொம்பு முயற்சிதான்.

ஆனால் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் பிறிதொரு இனத்துடன் உடன்பாடு செய்து கொள்வதன் மூலம்தான் ஒரு தமிழ் முதலமைச்சரை பெற முடியும். அது முஸ்லிம் சமூகமா அல்லது சிங்கள சமூகமா என்பதை தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிவரும்.

ஒரு தமிழர்தான் முதலமைச்சராக இருக்கவேண்டும் என்னும் நிலைப்பாட்டை ஒரு அரசியல் சுலோகமாக முன்னெடுக்கும் போது, அது நிச்சயமாக இனங்களுடைக்கிடையில் ஒரு போட்டியாகவே உருமாறும். வெகுசனங்கள் மத்தியில், அரசியல் ஒரு போட்டியாக காண்பிக்கப்படும் போது அதில் வென்று காண்பிக்க வேண்டும் என்னும் எண்ணம்தான் சனங்களை ஆட்கொள்ளும். இறுதியில் இது ஒரு இனமானப் பிரச்சினையாக மாறிவிடும்.

முஸ்லிம் சமூகத்தை பொருத்தவரையில், அவர்களுக்கு சிங்கள கட்சிகளோடு சேர்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்கப் போவதில்லை ஆனால் தமிழர் தரப்பின் நிலைமை அப்படியல்ல. இந்த விடயம் மேலோங்கும் போது, இறுதியில் தமிழ் முதலமைச்சர் முயற்சி கிழக்கிலுள்ள இரண்டு இனங்களையும் பகைத்துக் கொள்வதிலேயே முடிவுறும். இறுதியில் தமிழர் தரப்பே தோல்வியடையும். எனவே இந்த விடயத்தை, தந்திரோபாய ரீதியில் எவ்வாறு அனுகலாம் என்றே தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டும்.

இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முடிகிறதோ அல்லது இல்லையோ ஆங்காங்கே கிழக்கிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சில கலந்துரையாடல்கள் இடம்பெறாமலில்லை. இது முற்றிலும் சிவில் சமூகமட்ட முயற்சிகள் மட்டுமே. திருகோணமலையைச் சேர்ந்த ஒரு சிலர் இவர்கள் நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறான தமிழ் முதலமைச்சர் என்னும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.

இவ்வாறான சிலர் ஒன்று சேர்ந்து இலங்கை நிர்வாக சேவையில் இருந்த ஒருவரது பெயரை முன்மொழிந்திருக்கின்றனர். அவர் தொடர்பில் முக நூல்களிலும் பதிவிட்டும் வருகின்றனர். குறித்த நபர் நோர்வேயிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒருவர். இவர் முன்னர் விடுதலைப் புலிகளின் ஷிரான் கட்டமைப்பின் பணிப்பாளராக இருந்தவர்.

அதே வேளை, தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கும் அந்தக் கதிரையின் மீது ஆசையிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அப்பால், சம்பந்தனின் எதிர்க்கட்சி அலுவலகத்தில் அவரது உதவியாளராக இருக்கின்ற ஒருவரது பெயரும் சம்பந்தனின் மனதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது, சம்பந்தன் ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் இவ்வாறு கூறியதாகவும் ஒரு தகவலுண்டு. தான் கிழக்கு முதலமைச்சரை வெருகலுக்கு அங்காலே தேடிக் கொண்டிருப்பதாக சம்பந்தன் கூறியிருக்கிறார். வெருகலுக்கு அங்கால் என்பது மட்டக்களப்பையே குறிக்கும்.

உண்மையில் ஒரு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை மாவட்டம், சாதி, பணபலம் என்பவற்றுக்குள் குறுக்காமல், அவரது ஆளுமையக் கொண்டு தெரிவதுதான் சரியானது. ஆனால் தமிழ் அரசியல் சூழலில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் சூழலில் ஆளுமை என்பதை விட எவர் நமக்கு நாய்குட்டியாக இருப்பார் என்னும் அடிப்படையில்தான் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெறுகின்றன.

முக்கியமாக சம்பந்தனுக்கு நாய்குட்டியாக இருக்கக் கூடியவர்கள். இதுபோக, அன்மைக்காலமாக கூட்டமைப்பின் அரசியலில் பிறிதொரு போக்கும் மேலோங்கிவருகிறது. பல வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தவர்கள் சிலர், வயது முதிர்வின் காரணமாக, குளிர் ஒத்துவரவில்லை என்று மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் பெட்டிகளுடனும் வருகின்றனர். அவர்களுக்கு பொழுது போக வேண்டுமல்லவா! அதற்காக தமிழரசு கட்சியில் இணைகின்றனர். அவ்வாறானவர்களில் எவராவது எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆர்வம் காட்டக் கூடுமென்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தமிழ்த் தேசியம் அந்தளவிற்கு பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது. நிலைமைகள் எவ்வாறிருப்பினும் கிழக்கு மாகாண சபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு நிச்சயமாக சம்பந்தனின் தனிப்பட்ட முடிவாகவே அமையும்.