எதிர்ப்பையும் மீறி தயானிற்கு தூதுவர் பதவியை வழங்கினார் சிறிசேன

சிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒன்பது நாடுகளிற்கான தூதுவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்.இதில் தயான்ஜயதிலகவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ரஸ்யாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சிவில் சமூகத்தினர் தயானின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஜனாதிபதி அவர்களின் கரிசனையை புறக்கணித்து இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் தயான் ஜயதிலக நியமிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என தெரிவித்திருந்தனர்.

தயான் ஜயதிலகவின் கொள்கையும் 2015 ஜனவரி 8 இயக்கத்தை வழிநடத்திய கொள்கையும் முற்றுமுழுதாக வெவ்வேறானவை எனவும் சிவில் சமூகத்தினர் தமது கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.