இலங்கை சோமாலியாவாக மாறும் பாரிய ஆபத்து! அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை

ஸ்ரீ லங்காவில் ரயில்வே தொழிற்சங்கம் கோரும் சம்பள அதிகரிப்பை வழங்கினால் அரச ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோன்றும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழு அரசாங்கத்திடம் இந்த பிரச்சினையை எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளது.

ரயில்வே கண்காணிப்பு முகாமையாளர் சேவையில் உள்ள அதிகாரியின் சம்பளம் 44,400 ரூபா என்பதுடன் இவர்களது கோரிக்கைக்கு அமைவாக இத்தொகை 56,200 ரூபாவாக அதிகரிக்கும். இதற்கமைவாக நிர்வாக, வைத்திய, பொறியியலாளர், பாடசாலை அதிபர், உதவி பொலிஸ் அத்தியஸ்தகர், போன்ற பதவிகளில் உள்ள பெரும்பாலானோரின் சம்பளம் அதிகரிக்கும்.

அத்தோடு ஊழியர் சேவையும் அதிகரிக்க கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் கே.எல்.எல் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு அதிகாரம் வழங்கினால் பாரிய சம்பள முரண்பாடு ஏற்பட்டு தொழிற்சங்கள் கடும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

இருப்பினும் இது தொடர்பிலான பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமையாளர் சேவைக்கு ரயில்வே சாரதிகள், சமிக்ஞ்சை அதிகாரி, ரயில்வே மாஸ்டர் மற்றும் பரிசோதகர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கினால் ரயில்வே திணைக்களத்தின் ஏனைய ஊழியர்களுக்கு அநீதி இடம்பெறும் என்றும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனைத்து துறைகளுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் சாதாரண மக்கள் மீது வரிச் சுமை அதிகரித்து நாட்டில் வறுமை தலைவிரித்தாடி சோமாலியா நாட்டின் நிலைதான் தோன்றும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.