நாடாளுமன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை: சுதந்திரக் கட்சி

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மட்டுமன்றி நாடாளுமன்றத் தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அந்தக் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மாகாண சபைகள் தொடர்பிலான எல்லை நிர்ணய அறிக்கையை தோல்வியடைய செய்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடம் புகட்டிவிட்டார் என சில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

ஆனால், இதனை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். கட்சி எனும் ரீதியில் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாகவே நாம் இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தோம். மேலும், இந்த அறிக்கைக்கும் பைஸர் முஸ்தபாவுக்கும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழுவின் ஊடாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை, உரிய விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மட்டுமே அவர் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

எதிரணியில் உள்ளவர்கள் அனைவரும் பைஸர் முஸ்தபாவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் இதற்கெதிராக அவரே எவ்வாறு வாக்களிக்க முடியும் என விமர்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமைவாகவே, அவர் அறிக்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தார். நிராகரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது பிரதமரினால், நியமிக்கப்பட்ட 5 பேரடங்கிய குழுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள், இதில் திருத்தங்களை மேற்கொண்டு இரண்டு மாதங்களில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிவிட்டால், இதனை மீண்டும் நாடாளுமன்றுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை.

2015 தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதியத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுத் தான் மக்களும் வாக்களித்தார்கள்.

19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது நாம் தான் நாடாளுமன்றில் பெரும்பான்மையாக இருந்தோம். அப்போது எமக்கு 147 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இருக்கவில்லை.

எமது அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் தான் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியுமாக இருந்தது.

நாம் இதற்கு ஆதரவாக வாக்களிக்கும்போதே 20 திருத்தச்சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என நிபந்தனையூடாகத் தான் வாக்களித்திருந்தோம். இப்போதும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.