சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டுக்கு அபாயம்! உதய கம்மன்பில

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக, சிங்கப்பூரின் குப்பைகள் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளின் குப்பைகளும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தனது குப்பைகளின் பெரும்பாலானவற்றை சீனாவுக்கே ஏற்றுமதி செய்து வந்தது.

எனினும், 2018 ஜுலை மாதம் முதலாம் திகதி முதல், வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்யக்கூடாது என சீனா தீர்மானித்ததையடுத்து, அந்தச் செயற்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வியட்நாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளும் சுற்றாடல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இதே தீர்மானத்தை எடுத்துள்ளன.

இதனால், சிங்கப்பூருக்கு மட்டுமன்றி, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குப்பை முகாமைத்துவம் தொடர்பில் தற்போது பாரியப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.