ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

ஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் வரையில் பொது மன்னிப்பு வழங்குவதற்கு அவசரப் பட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் ஞானசார தேரருடைய சிறைத் தண்டனை தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவென அமைச்சரிடம் வினவியதற்கே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்து தேரர்கள் குழுவினால் ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இது குறித்து பேசினேன். ஜனாதிபதி இது தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரருக்கு தற்பொழுது வரை இரண்டு வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது வழக்கு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை தொடர்பிலானது. இது தொடர்பில் தேரருக்கு 06 மாத காலத்துக்கான கடும் வேலையுடன் கூடிய சிறைத் தண்டனை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தேரர் மேற்முறையீடு செய்தபோது தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது வழக்கு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அசாதாரணமான முறையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பானது. இந்த வழக்கில் 06 வருட கட்டாய சிறைத் தண்டனையும் 19 வருட பாரிய வேலையுடன் கூடிய சிறைத் தண்டனையும் நீதிமன்றத்தினால் தேரருக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.