இராணுவம் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை

ரயில் இன்ஜின் சாரதிகளுக்கான பயிற்சியை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவம் பாதுகாப்பு அமைச்சைக் கோரியுள்ளது.

நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது இராணுவம் எந்தவொரு நிலைமையையும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாகவும், இதன் ஒரு அங்கமாக இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தை மட்டும் இலக்கு வைத்து இந்தக் கோரிக்கையை முன்வைக்க வில்லையெனவும், ரயில்வே சாரதி பயிற்சிக்கு புறம்பாக, விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியையும் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் கூறியுள்ளார்.

இராணுவத்தினரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.

அண்மையில் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட போது அதற்குத் தீர்வாக இராணுவத்துக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.