வவுனியாவில் வறட்சியால் பாதிக்கபட்டவருக்கு பலகோடி நஷ்டஈடு!

வவுனியாவில் தொடரும் வறட்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதோடு, விளைநிலங்கள் காய்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நட்டஈடாக 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் காப்புறுதி பணம் அரச வங்கிகளுடாக பாதிக்கட்டவர்களுக்கு வைப்புச் செய்யபட்டுவருவதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் 8 கமநலசேவை நிலையங்களினதும் 2017, 2018ஆம் ஆண்டுக்கான வறட்சி பாதிப்புகளுக்கு அமைவாக இந்த நட்டஈடு வழங்கப்பட்டு வருகின்றது. வரவு – செலவுத்திட்டதின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காப்புறுதித் திட்டம் மற்றும் ஏனைய நிவாரண திட்டங்களினூடாக இப்பணம் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய விவசாய திட்டங்கள் ஊடாக 675 ரூபாய் வீதம் செலுத்தி 2149 விவசாயிகள் காப்புறுதி செய்திருந்தனர். அவர்களுடைய 5535 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்திருந்த நிலையில் அவர்களுக்கான நட்டஈடாக 8 கோடியே 4 இலட்சத்து 9362 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல உரமானியம் பெற்று கட்டணம் செலுத்தப்படாத இலவச காப்புறுதிக்கு 2735 விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுடைய 6885 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்த நிலையில் அவர்களுக்கான நட்டஈடாக 3 கோடியே 93 இலட்சத்து 35851 ரூபாய் பணம் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக வங்கிக்கடன் மூலம் காப்புறுதி செய்த 119 பேரின் 586 ஏக்கர் பயிர் அழிவுகளுக்காக 52 இலட்சத்து 19,730 வழங்கி முடிக்கப்பட்டிருப்பதாகவும் அதேபோல வவுனியா மாவட்டத்தில் மேட்டுப் பயிரான உழுந்து பயிருக்கும் காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டடார்.

347 விவசாயிகள் அதற்காக காப்புறுதி செய்திருந்ததுடன் அவர்களுடைய 441 ஏக்க் பயிர் அழிவிற்காக 35 இலட்சத்து 19693 ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வறட்சி காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பின்னர் 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.