ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழ்,சிங்கள நண்பர்கள்

ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் குறித்த இருவரும் புதைக்கப்பட்டுள்ளனர்.

அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன் மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர ஷிவகுமார் என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தின் ஒரே இடத்தில் தொழில் செய்த நண்பர்களாகும்.

குறித்த இருவரும் கடந்த 25ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் இரவு 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தமிழ் இளைஞர் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இரண்டு நண்பர்களினதும், இறுதி நடவடிக்கை ஒரே நாளில் ஒரே குழியில் புதைப்பதற்கு உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தென்னிலங்கையில் இனவாத ரீதியான மோதல்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இவ்வாறான துன்பியல் நிகழ்விலும் நல்லிணக்கம் பேணப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்னர்.