இலங்கையின் கல்வி தந்தைக்கு புகழாரம்! தமிழ்நாட்டை சிங்கள ஆட்சியுடன் ஒப்பிட்ட பேசிய இளைஞனால் பரபரப்பு!

இலங்கையில் மாறிமாறி வந்த ஆட்சியாளர்கள் எவ்வளவு யுத்தம் நடந்தாலும். கட்டுப்பாட்டு பிரதேச எல்லைகள் மாறினாலும். கல்வியை முடிந்தவரை சீராக வழங்கினார்கள். பாடசாலைகளிலே குண்டுகள் விழுந்தாலும் பொதுப் பரீட்சைகளுக்காக மோதல் தவிர்ப்புகள் கடைப்பிடிக்கப்பட்டன. புலிகளின் ஆளுகைக்கு கீழ் இருக்கிறார்கள் என்பதற்காக கல்வி யாருக்கும் மறுக்கப்படவில்லை.

புத்தகம், உடை, உணவு, சப்பாத்து, சுரக்‌ஷா இன்சூரன்ஸ், உயர்கல்விக்காக பணம் முதலானவை இன, புவியியல் வேறுபாடின்றி கிடைக்கிறது, முன்னரும் கிடைத்தது.

இப்போது கொஞ்சம் எமது பக்கத்துவீடான தமிழ் நாட்டை எட்டிப்பார்ப்போம். இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பியதே இல்லை. நீண்ட காலம் நீடித்த பெரிய கலவரங்களோ, போராட்டங்களோ நடைபெறவில்லை, அமைதியான தேசம் அரசியல் ஸ்திரத்தன்மைகொண்ட தேசம்.

இங்கு சிங்களவர் ஆட்சியில் ஆட்சி நடப்பது போல அங்கில்லை. ஆட்சியில் இருந்தவர்களும் தம்மை பச்சைத்தமிழர் என்றே சொல்லிக்கொண்டனர்.

கடந்த வருடம் சென்னையில் ஒரு அரசாங்க பாடசாலைக்கு பக்கத்தில் தங்கியிருந்தேன். அவர்கள் அதை காப்பிறேசன் பாடசாலை என்றே அழைப்பர். 2017 ஆம் ஆண்டிலும் அந்தப் பாடசாலையில் பிள்ளைகள் நிலத்தில் இருந்து படிக்கின்றனர். உண்மையில் மிகவும் கவலையடைந்தேன்.

தமிழனின் தலைநகரில் இப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை. நான் கூட இரண்டாந்தரத்தில் ஒரு மூன்றுமாதங்களே தரையில் உட்கார்ந்து படித்தேன் இது நடந்து மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன. இப்போதும் அங்கு குழந்தைகள் தரையிலே இருந்து படிக்கிறார்கள்.

அந்தப்பிள்ளைகள் இருந்த கோலம், அவர்களது ஆடை என்பன இற்றைக்கு சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகமிகபின்தங்கிய ஒரு பிரதேச பிள்ளைகளை ஞாபகப்படுத்தியது.

அப்பாடசாலை அமைந்துள்ள இடத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு தனியார் பாடசாலை இருந்தது. மாணவர்களை பார்க்கும்போதே ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு தெளிவாக விளங்கியது.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பது எல்லாப்புண்ணியங்களிலும் புண்ணியம் என்று சொன்ன பாரதியின் மண்ணை கல்வியை காசால் அளக்கும் ஊராக திராவிட ஆட்சியாளர்கள் மாற்றிவைத்திருக்கின்றனர்.இதைப்பார்த்ததும் C.W.W கன்னங்கரா அவர்கள் எவ்வளவு பெரிய தலைவர் என்று எண்ணத்தோன்றியது.இந்த கருத்தால் சற்று பரபரப்பு நிலவுகிறது.