வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து, அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்துள்ளது.

குறித்த பேரணியில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?’, ‘வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே?’, ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே?’, ‘இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே?’, ‘புதிய ஜனாதிபதியே இன்னும் ஏன் மௌனம்’, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் எத்தனை காலத்திற்கு?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.