கிளிநொச்சியில் படுகொலை செய்யப் பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியிலுள்ள வயல் கால்வாயிலிருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து நேற்றுக் காலை குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.

வயலுக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கு சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாலும் சடலமானது உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ளமையாலும் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகத்தினர்.

இந்நிலையில் குறித்த சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் குறித்த பெண் 5 மாத கர்ப்பிணியெனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் 32 வயதுடையவரெனவும் கணவரைப் பிரிந்து வாழ்பவரெனவும் இவருக்கு 5 வயதில் பெண் பிள்ளையொன்று இருப்பதாகவும் குறித்த பிள்ளை மாற்றுத்திறனாளியெனவும் பொலிஸ் விராரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகளையடுத்து பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.