வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது காவல் துறை தாக்குதல்...பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

வவுனியா கனகராயன்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வீடியோ மூலம் வாக்குமுலம் தெரிவித்துள்ளதால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு தாக்கபட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாகவும், குறித்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா. கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து விடுதியில் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் இந்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றம் அந்த ஹோட்டல் உரிமையாளர் எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.

ஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணி உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர், காவல் துறையினரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது, அங்கு சிவில் உடையில் சென்ற கனகராயன்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் காவல் நிலைய நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

காணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது, அவரது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

இதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட வீட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 42 வயதுடைய காணி உரிமையாளர் பே.வசந்தகுமார் காவல் தறையினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிள்ளைகளான 16 வயதுடைய கிருபாகரன், 14 வயதுடைய சர்மிளா ஆகியோரும் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யச் சென்ற போதும் அவர்கள் நீண்ட நேரம் தாமதப்படுத்திய பின் முறைப்பாட்டை பதிவு செய்யாது பின்னர் திருப்பி அனுப்பினர்.

இதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் காவல் நிலையம் நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.