நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச அபிவிருத்தி அதிகாரிகள் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டத்தை கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஏனைய அபிவிருத்தி அதிகாரிகளை போன்று மாதாந்த சம்பளத் திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பதை முக்கிய பிரச்சினையாக வலியுறுத்தவுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.