ராஜிவ் கொலை கைதிகளின் விடுதலை குறித்து: மஹிந்த

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி சென்றுள்ள அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு கூறினார்.

குறித்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என்பதனால், தனக்கு எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக ஆளுநரிடம் இருப்பதாக உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.

அதற்கமைய குறித்த ஏழு பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.