அவுஸ்திரேலியாவில் பெரும்பாலான இலங்கையர் உள்ளிட்ட பலரிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளிட்ட 25 புகழிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவலகள் திணைக்களம் நேற்றிரவு நாடுகடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகக் குறுகிய கால அறிவித்தலின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மெல்போனைச் சேர்ந்த ஏதிலிகள் செயற்பாட்டு சட்டத்தரணி நிக் ஸ்டெப்பன்சன், தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்கள் நேற்றிரவு விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னரே அவர்களுக்கான நாடுகடத்தல் அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், மேலும் சில புகழிடக் கோரிக்கையாளர்களுக்கும் நாடு கடத்தல் விண்ணப்பம் கிடைத்திருக்கும் என அவர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவில் இருந்து 9 புகலிட கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மெல்போனின் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ஏதிலிகள் தம்பதியினரின் இரண்டு பெண் குழந்தைகளும் நடத்தை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஏதிலிகள் சபை இந்தத் தகவலை வெளியிட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

நடேசலிங்கம் மற்றும் பிரியா தம்பதியினரும், அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த மூன்று மற்றும் ஒரு வயது பெண் குழந்தைகளும் நாடுகடத்தப்படும் நிலையில் மெல்போன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடேசலிங்கம், பிரியா ஆகியோர் படகு மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

இதையடுத்து, குயின்ஸ்லாந்தின் பிலோலே பகுதியில் அவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் தற்காலிக விஸா கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததை அடுத்து, இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்காக நடேசலிங்கம், பிரியாவும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், குறித்த இரண்டு பெண் குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்ட காலம் முதல் ஒழுக்கம் சார்ந்த மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழ் ஏதிலிகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பம் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அங்குள்ள நிலைமைகள் சிறு குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என தமிழ் ஏதிலிகள் சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ஏனைய குழந்தைகளுடன் தொடர்பின்றி இருப்பது, அவர்களின் நடமாடும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

விளையாடுவதற்கான குழுக்களோ அல்லது இளம்பராய கற்கைகளோ அங்கு இல்லை.

இந்த நிலையில், குறித்த தமிழ் ஏதிலிகள் குடும்பத்தை விடுதலை செய்து அவர்களை பிலோலே பகுதியில் மீள குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கோருவதாக தமிழ் ஏதிலிகள் சபை தெரிவித்துள்ளது.