பாலில் விஷம் :மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நாமல் ராஜபக்ஷவின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டையே வெளிக்காட்டுவதாக, ஐ.தே.க.வின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையத்தல் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி, மட்டமான அரசியல் செயற்பாடுகளில், ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அவர்களின் போரட்டம் தோல்வியடைந்தவுடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்.

ஐ.தே.க.வினர், சுதந்திரக் கட்சியினருக்கு விஷம் கொடுத்துள்ளதாக நாமல் கிராமங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொள்கிறார்.

இந்த போராட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பினை காட்டியதை சமூக ஊடகங்களிலேயே நாம் பார்த்தோம். நாட்டில் இனவாதத்தைப் பலப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒன்றிணைந்த எதிரணியினர், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்தே போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கும் போது, கடந்த காலங்களில் அம்பாறையில் இடம்பெற்றக் கலவரங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் அறிய முடிகிறது. மஹிந்த அணி, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இருந்த சிறிதளவு வாய்ப்புகளும், நாமல் ராஜபக்ஷவின் செயற்பாட்டினால் இன்று இல்லாமல் போயுள்ளது.

எவ்வாறாயினும், எமது கட்சி உறுப்பினர்கள் மீது முன்னெடுக்கப்படும் போலிப்பிரசாரங்களை சட்ட ரீதியாக அணுக நாம் தீர்மாத்துள்ளளோம். நாம் இதற்கெதிராக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். இது மக்களை மோத விடும் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும்.

இந்த விடயம் குறித்து நாம் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளோம். இதுதொடர்பில் நாம் எவ்வாறான விசாரணைக்கு முகம் கொடுக்கவும் தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.