கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி

இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG) ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, SHARP அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப். கேணல் வீ.எஸ்.எம்.சரத் ஜயவர்தன மற்றும் MAG அமைப்பின் தொழில்நுட்ப நடவடிக்கை முகாமையாளர் ரொவ்னான் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கைச்சாத்திட்டனர்.இந்த மானிய ஒப்பந்தத்திலிருந்து SHARP அமைப்பு 625,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை MAG அமைப்பு 624,997 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட பகுதிகளை பாதுகாப்பானதாக மாற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்பதற்கு வழிசெய்து வட பிராந்தியத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த இரு திட்டங்களும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடிமட்ட மனிதப் பாதுகாப்பு திட்ட மானிய உதவிகளின்Grassroots Human Security Project (GGP) மூலமாக இதுவரையில் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (535 கோடி இலங்கை ரூபாவிற்கும்) அதிகமான தொகையை வழங்கியுள்ளதன் மூலமாக 2003ம் ஆண்டு முதலாக இலங்கையில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் அன்பளிப்பை வழங்குகின்ற நாடாக ஜப்பான் திகழ்கின்றது. 2020ம் ஆண்டாகும் போது கண்ணிவெடியின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் இலக்கின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்வு விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வாழ்வாதாரச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும் துரிதப்படுத்தி வசதிவாய்ப்புக்களை முன்னெடுப்பதற்கும் இந்தப் பங்களிப்பு துணைபுரிந்துள்ளது.இந்த மானிய உதவி குறித்து ஒய்வுபெற்ற லெப். கேணல் வீ. எஸ்.எம். சரத் ஜயவர்த்தன கருத்து வெளியிடுகையில், “2014ல் SHARP நிறுவனம் உருவாக்கப்பட்டதுடன் இலங்கையில் கண்ணிவெடியகற்றலை முன்னெடுக்கும் இரண்டாவது உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் ஆக விளங்குகின்றது. இன்றைய தினம் GGP நிதியுதவி SHARP அமைப்பிற்கு 3வது ஆண்டாக தொடர்ச்சியாக வழங்கப்படுவதை குறித்து நிற்கின்றது. SHARPஎமது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகளை வழங்கி ஊக்குவித்து வருவதற்காக ஜப்பானிற்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளதுடன் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம்.

இந்தவேளையில் எமது அனுசரணையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் SHARP அதன் நடவடிக்கைகளை விடாமுயற்சியுடனும் வினைத்திறனுடனும் காத்திரமான வகையிலும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என நான் எமது அனுசரணையாளர்களுக்கு உறுதியளிக்கின்றேன்” என்றார்.

MAG அமைப்பைச் சேர்ந்த ரொவ்நன் பெர்ணான்டஸ் கூறுகையில் “இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளுக்கான பெறுமதிமிக்க நன்கொடையாளராக விளங்குகின்ற ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து இந்த மானிய நிதியை பெற்றுக்கொள்வதையிட்டு MAGகௌவரமடைகின்றது.

கடந்த நான்கு வருடங்களில் மாத்திரம் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் MAG SRILANKA அமைப்பிற்கும் இடையிலான கைகோர்ப்பின் மூலமாக 11000 ற்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதும் அழிப்பதும் சாத்தியமாகியுள்ளது. இதன் மூலம் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேறுவதற்கும் தமது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் துணைபுரிந்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேவேளை வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை ஆரம்பிக்க MAG எதிர்பார்த்துள்ளது. ஜப்பானிய மக்களின் நிதியுதவியானது மக்களின் உயிர்களைக் காப்பதற்கு மட்டுமன்றி நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகங்கள் மத்தியிலும் அதிகமாக கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கும் இந்த தொடர்ச்சியான ஜப்பானிய ஒத்துழைப்பின் மூலமாக 2020ம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடிகளின் தாக்கம் அற்ற நாடாக மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க MAG எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.