மைத்திரியும் மஹிந்தையும் ஒரே கிளாஸ் மேட்

அதளபாதாளத்தில் போய்க் கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியேழுப்ப வேண்டும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கம். அதனை செய்தது இல்லை என்று கூறவில்லை மாறாக குறுகிய காலத்திற்கே அதன் பயன்களை மக்கள் அனுபவித்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி 100 நாள் வேலைத்திட்டம் என்ற போர்வையில் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து, அதில் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்குடன் எரிபொருள் விலை, அத்தியவசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளைக் குறைத்ததுடன், அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வினையும் வழங்கியது.

மேலும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்தால் மேலும் மேலும் சலுகைகளை வழங்குவதற்கு தாம் வேலைத்திட்;டங்களை வைத்திருப்பதாக தெரிவித்த ஆட்சியாளர்கள் இன்று படிப்படியாக மக்களின் வாழ்க்கைச் சுமையினை அதிகரித்துவிட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் மக்களுக்கு வெறுப்பூட்டும் வகையில் அமைந்து கொண்டு செல்லவும், மஹிந்த தரப்பு ஒன்றிணைந்த எதிரணி மக்களை தம் பக்கம் இழுக்கும் வகையில் ஆட்சியாளர்களினால் மக்களுக்கு இழைக்கப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிவருவதுடன் தமது காலத்தில் இவ்வாறு மக்களுக்கு வாழ்க்கைச் சுமை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இருந்த காலத்தில் அத்தியவசியப் பொருட்களின் விலையில் பாரியளவு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை மாறாக அவர் மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் சந்தேகிப்பட்டு பதவி விலகிய நிலையில் நிதியமைச்சு இரண்டு தடவைகள் எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ளது.

எரிபொருள் விலை ஏற்றம் என்பது வெறுமனே சாதாரண ஒரு விலையேற்றமல்ல மாறாக அது சகல உற்பத்திகள் மற்றும் சேவைத்துறையின் கட்டணங்களையும் அதிகரிக்கும் மூலசூத்திரமாக காணப்படுகின்றது.

எரிபொருள் விலையேற்றத்துடன் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கும், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் போது மக்களின் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும், இவ்வாறு விவசாய உற்பத்திகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும். எரிபொருள் விலையேற்றம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சியினையே காட்டுகின்றது.

இவ்வாறு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிக்கின்ற போது சம்பள உயர்வுக்கான தேவையினை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக தமது கோரிக்கையினை நிறைவேற்றிக் கொள்வார்கள். மாறாக தனியார் ஊழியர்கள் மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்கள் செய்வதறியாது தவிக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

பொதுவாக எரிபொருள் விலையேற்றம் கிராம மக்களின் வாழ்க்கையினையே பாதிக்கின்றது. அன்றாடம் காஞ்ச்சிகளாக வாழ்க்கை நடத்துக்கின்ற இந்த மக்களுக்கு விலையேற்றம் என்பது பாரிய சுமைமே. அன்றாட உழைப்பையே நம்பி வாழ்கின்ற இந்த மக்களுக்கு கடன் மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு வாழ்க்கைச் சுமையானது அதிகரிக்கின்ற போது மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைவதுடன் சமூகத்தில் வன்முறைகளுக்கும் இந்த விலையேற்றங்கள் வித்திடுகின்றன.

இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ வசதிகளை வழங்குகின்ற அரசாங்கம், உணவுப் பொருட்கள் மீதான வரி அறிவீடு, பொருட்களின் அதிகப்படியான விலையேற்றத்தின் ஊடாக இலவசங்களுக்குச் செலவளிக்கும் தொகையினைவிட அதிகமாக கொள்ளை அடிக்கின்றன.

கல்வியும் மருத்துவமும் இலவசம் என்று சொன்னாலும் இதில் என்ன பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. வளங்கள் கொட்டிக்கிடக்கும் நகரத்தை அண்டிய பகுதிகளில் இவற்றின் சேவை சரியாக இருந்தாலும் கிராமங்களில் என்னமோ மக்கள் அவற்றினை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அரசியல்வாதிகள் என்பதையும் தாண்டி தமது கட்சி, குடும்ப, தனிநபர் அதிகாரத்தில் மையம் கொண்டிருப்பதினால் அரசியல்வாதிகள் மக்களின் வாழ்க்கை தொடர்பில் அவர்களின் பொருளாதார முன்னேற்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை.

ஆட்சிக்காலங்களில் மக்களுக்கு நன்மை செய்யாத அரசியல்வாதிகள் மக்களினால் வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்த பணங்களை ஆர்ப்பாட்;டங்கள் போராட்டங்கள் என செலவு செய்கின்றனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக இன முரண்பாட்டுத்தளத்தை வைத்துக் கொண்டு, பொருளாதார வங்குரோத்துக்களை மறைத்து ஆட்சி செய்யவே முற்படுகின்றனர். மேற்கதைய நாடுகளில் ஆட்சியாளர்களின் பொருளதார கொள்கை தோல்வி அடைகின்ற போது அவர்களாகவே ஆட்சி கைவிட்டு போகின்ற நாகரீக அரசியல் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் என்னதான் தோல்வியில் முடிந்தாலும் அரசியல்வாதிகள் அதிகாரத்தை விட்டு போவேமாட்டார்கள். இது இலங்கை மக்களின் சாபக்கேடு.

உண்மையில் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் விவசாய மற்றும் கடல் உற்பத்திகளை அதிகப்படியாக உற்பத்தி செய்து மக்களி;ன் தேவைகளுக்கு போக மிகுதியை ஏற்றுமதி செய்து அதன் ஊடாக வருமானத்தைப் பெற வேண்டும். ஆனால் இலங்கை பல நாடுகளிலும் கடனை வாங்கிக் கொண்டு அவர்களின் உற்பத்திகளுக்கு இலங்கையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டின் உற்பத்திகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

இறக்குமதி வரி மூலம் அரசாங்கத்திற்கு இலாபம் ஏற்படுகின்றது மறுபுறத்தில் மக்களுக்கு விலைச்சுமை ஏற்படுகின்றது. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முதலீடுகளை மேற்கொண்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலமாக வேலையில்லாத் திட்டம் குறைவதுடன், மக்களின் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்.

அத்துடன் படித்தவர்கள் அரசாங்க வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருப்பது குறைவடையும். இவ்வாறு அரசாங்க வேலை வாய்ப்பு வழங்கல் குறைவடைகின்ற போது அரசாங்கத்தின் அரச சம்பள வழங்கல் தொகை குறைவடையும். இவ்வாறு குறைவடைகின்ற போது அரசாங்கத்தின் மக்கள் மீதான வரி விதிப்பு குறைவடைந்து நாட்டு மக்களின் வாழ்க்கை செழிப்படையும்.

ஆகவே நாட்டின் சேவைத்துறைக்கும், இறக்குமதிக்கும் முன்னுரிமை வழங்குவதை அரசாங்கம் குறைத்துக் கொண்டு முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி என்பனவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

அசாங்க திறைசேரியில் பணப்பற்றாக்குறை ஏற்படுகின்ற போது எரிபொருளின் விலையை அதிகரிப்பது, அத்தியவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பது என்ற காரியங்களைச் செய்யாது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டும். மேலும் அதிகரித்துள்ள எரிபொருள் விலை ஏற்றத்தினை உடனடியாக குறைத்து மக்களின் வாழ்க்கைச் சுமையினை குறைக்க வேண்டும்.