சர்வதேச அளவில் இலங்கையை பெருமையடையச் செய்யும் யாழ் வீராங்கனை

இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான்.

இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை 2018 ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது

தர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.

இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபுவங்களை இவருக்கு கொடுத்து இருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார்.

கல்விப் பொது தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடியும் இரண்டு அங்குலமும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்.

அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.

இவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.

தர்சினி 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 22 வயதை அடைந்த பிற்பாடு தர்சினியின் உயரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

தர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது.

ஆயினும் இங்குதான் இவரின் வலைப் பந்தாட்ட திறமை ஊக்குவிக்கப்பட்டது. கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டார்.

இவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் இவரை வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது.

இலங்கை வலைப் பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு சிம்ம சொப்பனம் ஆனார்.

இவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போட்டு விடுவார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய வலைப் பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக வாகை சூடியது இலங்கை.

இப்போட்டியில் மொத்தமாக இலங்கை அணியால் 79 கோல்கள் போடப்பட்டன. இதில் 74 கோல்களை தர்சினி போட்டு இருந்தார்; என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் மற்றொரு யாழ் வீராங்கனையான எழிலேந்தினியும் இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.