மறுசீரமைப்பு செயற்பாடுகள் வலுவிழந்து போகும் அபாயம்

போதுமான நடவடிக்கைகள் இல்லாததன் காரணமாக, மறுசீரமைப்பு செயற்பாடுகள் வலுவிழந்து போகும் அபாயம் இருப்பதாக, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, மெசடோனியா மற்றும் மொன்டினேக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்துள்ள இலங்கை குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த கால அனுபவங்களை சீர்செய்யவும், சமுகங்களுக்கு இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை அமுலாக்குவது அவசியம் என்று இலங்கை அரசாங்கம் ஒப்புகொண்டது.

ஆனால் அவ்வாறான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக எந்த புதிய சட்டமும் முன்வைக்கப்படவில்லை.

அண்மைக்காலத்திலும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் வருத்தமளிக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்கும் பணிகள் உள்ளிட்ட சில விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.