துயிலுமில்லங்கள் தொடர்பில் முன்னாள் போராளிகள் வேண்டுகோள்!

இளைய தலைமுறையினரின் தலைமைப் பண்பை விருத்திசெய்யும் முகமாக மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினதும், கோப்பாயில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும் பங்களிப்பு இருக்க வேண்டுமென முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தத் துயிலுமில்லங்களுக்கான செயற்பாட்டுக் குழுவை அமைக்கும்போது தமது வேண்டுகோளை கருத்திற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பாலிப்போடி சின்னத்துரை (யோகா), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா), திருகோணமலையைச் சேர்ந்த ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) ஆகிய முன்னாள் மூத்த போராளிகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போதே இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

அத்தோடு, கடந்த காலங்களில் மாவீரர் மாவீரர் தினங்களின்போது அரசியலும் காணப்பட்டதாக தெரிவித்த முன்னாள் போராளிகள் இனிவரும் காலத்தில் மாவீரரின் மனைவியோ பிள்ளைகளோ பொதுச்சுடரை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

தியாகி திலீபனின் நினைவுதினத்தன்று ஒருவர் தூக்குக்காவடி எடுத்திருந்ததை இதன்போது சுட்டிக்காட்டிய முன்னாள் போராளிகள், அதனை உணர்வு மேலீடாக கருதியபோதும் பின்னர் அவர் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, யுத்த காலத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் காணப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்கள் புதைக்கப்பட்டனர். எனினும், அவர்களது பெற்றோர்கள் தமது சொந்த இடங்களில் வாழ்ந்து வருவதால், மாவீரர் தினத்தன்று அவர்கள் தமது உறவுகளின் துயிலும் இல்லங்களுக்குச் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டனர்.