இலங்கை - வியட்நாம் பிரதமர்கள் சந்திப்பு

இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையே அரசாங்கத் தொடர்புகளை மாத்திரமன்றி, பாராளுமன்றம் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வியட்நாம் பிரதமர் கியென் சுன் புக் (H.E. Nguyen Xuan Phuc) தெரிவித்தார்.

வியட்நாம் பிரதமர் கியென் சுன் புக்கிற்கும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே வியட்நாம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இரு தரப்புக் கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல், சமய, சமூக மற்றும் வணிகத் துறைகள் மத்தியிலும் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் வைபவம் வியட்நாமின் ஹெனொய் நகரை மையப்படுத்தி இடம்பெறுகின்றமையால் அதற்கு இலங்கையின் ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையே பௌத்த பிரதிநிதிகளைப் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய விக்ரமசிங்க, இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையே காணப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர்புகள் குறித்து ஆராய்வதற்காகத் துறைதேர்ந்த புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு இணைந்த குழுவை நியமிப்பது பொருத்தம் எனவும் தெரிவித்தார். இந்தக் குழுவை மிக விரைவாக நியமிக்க வேண்டும் என்று வியட்நாம் பிரதமர் குறிப்பிட்டார்.

வியட்நாம் நாட்டவர்கள் அதிகமானோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றமையால், இரு நாடுகளுக்குமிடையே நேரடி விமானச் சேவைகளை ஆரம்பிப்பதன் தேவை தொடர்பாக வியட்நாம் பிரதமர் தெளிவுபடுத்தியதுடன், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை பிரதமர் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளுக்குமிடையிலான ஒழுங்குவிதிகளை மேலும் தளர்த்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்று வியட்நாமுக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அதன் பின்பு வர்த்தகத் துறையில் தொடர்ச்சியான பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையே மீன்பிடித்துறை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவித்த இரு நாடுகளினதும் பிரதமர்கள், பொருளாதார ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இணைந்த குழுவின் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துவதன் தேவையினையும் வலியுறுத்தினர்.

பிராந்திய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பற் போக்குவரத்து மற்றும் அமைதியைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர்கள் இருவரும் உறுதியளித்தனர்.

இந்த நிகழ்வில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசிந்தி திஸாநாயக்க, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்.