வடக்கு - கிழக்கு பெண்களிற்கு நடக்கும் பயங்கரம்

நுண்கடன் திட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முன்னாள் யுத்தப் பிரதேசங்களில் வசிக்கின்ற வறியப் பெண்களை இலக்கு வைத்து பெரும் வட்டியை அறவிட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபைத் தெரிவித்துள்ளது.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ஜோன் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கடன்களுக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் 220 சதவீத வட்டி அறவிடப்பட்டுள்ளது.

சிலப் பெண்களிடம் கடன் தவணைக் கட்டணத்தை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக பாலியல் லஞ்சம் கோரி அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நுண்கடன் திட்டத்தைப் பெற்றுக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாதவர்கள், தங்களது சிறுநீரகத்தொகுதியை விற்பனை செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கு பெரும் சுமையை வழங்கும் வகையிலும், கடன்கொடுத்தவர்கள் பெரும் லாபத்தை சம்பாதிக்கும் வகையிலுமே இந்த நுண்கடன் பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார அபிவிருத்தி குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, மனித உரிமைகளை மையப்படுத்தியே அவை அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இலங்கைக்கான ஒன்பது நாள் விஜயம் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.