ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கதான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இவ்விஜயம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இலங்கையின் அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு குறித்த முன்னைய கருத்துக்கள் தொடர்பாக வருந்துகிறீர்களா என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, தேர்தல் போன்ற ஒரு நாட்டின் உள்ளூர் விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிட கூடாது. எனது கருத்து இந்தியாவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கருத்தாகும். ஆனால், நாம் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான முதலீடு மற்றும் தொடர்பாடல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் கூறினார்.