மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய ஒஸ்ரியாவின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான எலிசபெத் ரிசி ஃபிசில்பெர்கர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் சில முன்னேற்றகரமான செயற்பாடுகளை வரவேற்கின்ற போதிலும், மேலும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐ.நா.விற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதனை உறுதி செய்வதற்கு ஐ.நா. சபையின் 39ஆவது கூட்டத்தொடரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் மரண தண்டனையை முழுமையான இல்லாதொழிக்கும் எண்ணப்பாட்டுடன், தற்போதைய மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.