வடக்கில் இந்திய குடியேற்றம்? அரசாங்க தகவல் திணைக்களம் மறுப்பு

வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை நெடுங்கேணி கிராமத்தில் குடியமர்த்தியுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை அரசாங்க தகவல் திணைக்களம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.வெளிநாட்டு பிரஜைகள் அல்லது குடும்பங்கள் நாட்டின் எந்த பாகத்திலும் குடியமர்த்தப்படவில்லை எனவும், இதுதொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுத்தத்தின போது இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 10 ஆயிரத்து 675 இலங்கையர்கள், 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர், தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

அவர்களே தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.