ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த தமிழ் பெண்மணி.

வெற்றி எனும் இலக்கை அடைய சோதனைகளை கடக்க வேண்டியது அவசியம் என பல சாதனையாளர்கள் சொல்லி கேட்டிருப்போம்.

அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து தான் எதனால் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிட்டதோ அதை கொண்டே சாதனை படைத்த தமிழ் பெண்மணி தான் தர்சினி சிவலிங்கம்.

ஆறு அடியும் பத்து அங்குலமும் உயரத்தை கொண்ட இவர் சிறுவயதில் ஏளன சிரிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார்.

எனினும் தற்போது தனது தாய் நாட்டிற்கு அடுத்தடுத்து பெருமைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தர்சினி சிவலிங்கம் உள்ளிட்ட இலங்கை வலைபந்தாட்ட அணி, ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தினை இம்முறையும் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த அணியில் தர்சினியின் பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது.

1982ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக தர்சினி பிறந்துள்ளார்.

இவர்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் உயரமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் தர்சினி சிவலிங்கம் வெகு விரைவாக அதீத உயரத்தை அடைந்துள்ளார். அதேபோன்று தர்சினி தனது திறமையிலும் உச்சத்தை தொட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்ட தர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்சினி தனது வாழ்க்கையில் சிறுவயதில் மோசமான அனுபவங்களை கண்ட போதும் தற்போது அவர் உலகறிந்த பிரபலமாக மாறியுள்ளார்.