பாடசாலையில் புகுந்த யானையால் பரபரப்பு

வெலிக்கந்தை பகுதியில் காட்டு யானைகளால் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கும் பாடசாலை சுற்றுமதிலுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவின் காலிங்வில பகுதியில் நேற்று இரவு 3 வீடுகள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமொன்றில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையொன்றினால் தாக்கப்பட்ட விவசாயியான பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் வெலிக்கந்தை நகரத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காலிங்வில கிராமத்தைச் சுற்றி மாலையாகியதும் காட்டு யானைகள் முகாம் அமைத்து இருப்பதைப் போன்று உலாவருவதாக கிராமவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

மாலையாகியதும் கிராம மக்கள் அச்சத்துடனேயே காலங்கழிப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளியிலுள்ள பாடசாலையொன்றின் சுற்றுமதிலை காட்டு யானைகள் தள்ளிவீழ்த்தி விட்டுச் சென்றுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

நேற்று இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலய சுற்றுமதிலே தகர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள்ளும் காட்டு யானைகள் உட்புகுந்து உணவுக்காகத் தேடி வீட்டைச் சேதப்படுத்தியுள்ளன.

எனினும் இச்சம்பவங்களில் ஆட்கள் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.