யாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உத்தம கடவுள்

நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.

இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை செய்கின்ற மனிதர்களும் எம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறு தன் தாய் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழும் உன்னத மனிதர்களுள் ஒருவரே இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களில் இதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையுள்ள பலர் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு வைத்தியர் சிதம்பரநாதன் முகுந்தன் இலவசமாக சத்திர சிகிச்சை செய்து வருகிறார்.

அத்துடன், வசதி படைத்த மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த திறந்த இதய சத்திர சிகிச்சையை யாழ். குடா நாட்டில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய சாதனையாளராகவும் முகுந்தன் திகழ்கின்றார்.

இலங்கையில் கொழும்பு, காலி, கண்டி போன்ற இடங்களில் மாத்திரமே இதய சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதி காணப்பட்ட நிலையில், இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பேற்று சென்ற பின் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

இதன் பயனாகவே இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அப்பகுதி மக்களிற்கு இருதய சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தன் கடவுளாகவே தென்படுகிறார்.

இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு விழா

யாழ். போதனா மருத்துவமனையின் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பாராட்டு விழாக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

சாவகச்சேரி சிவன் கோவிலில் இருந்து விழா மண்டபம் வரை நாதஸ்வர வித்துவான் கே.எம்.பஞ்சாபிகேசனின் பேரர்களான வி.சித்தார்த்தன் , வி.பிரதித்தன் ஆகியோருடைய இசைமழையில் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனன் இறைவணக்கம் இசைத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.

சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.வீரபத்திரக்குருக்கள், சாவகச்சேரி பங்குத் தந்தை அருட்பணி றெக்ஸ் சவுந்தரா அடிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

பாராட்டுரைகளை வடமாகாண உறுப்பினர் கேசவன் சயந்தன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் ச.ஸ்ரீபவானந்தராஜா, தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு, உணர்வழியியல் வைத்திய நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்யட்சகர் டாக்டர் ப.அச்சுதன், யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த ச.ரண்குமார் ஆகியோர் ஆற்றினர்.

டாக்டர் சி. முகுந்தனின் பணிகளை நயந்து முகுந்தம் என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கைலைநாதன் வெளியிட்டு வைத்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முதலாக திறந்த இருதய சத்திரசிகிச்சையை மேற்கொண்ட குழுவில் பிரதான அங்கம் வகித்த உணர்வழிவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சு.பிரேமகிருஷ்ணா, தலைமைத் தாதிய உத்தியோகத்தர் பி.ஜே.வி.ரமேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

விழாக்குழுவின் இணைச் செயலர் ச.தயாபரன் நன்றியுரை நல்கினார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண உறுப்பினர்களான அரியரட்ணம், ஜெயசேகரம், கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை, மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களுள் பலர் மட்டுவிலில் இருந்து வருகை தந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் தென்மராட்சி மக்கள் சார்பிலான நினைவுக்கிண்ணத்தை முதலமைச்சர் கையளித்தார். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் சார்பான நினைவுக் கிண்ணத்தை தலைவர் ந.சிவபாலன் , உபதலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் கையளித்தனர்.

முகுந்தன் ஆரம்பக் கல்வியைக் கற்ற மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயம் சார்பான கௌரவிப்பை அதிபர் எழிலன் தலைமையிலான பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கானோர் பொன்னாடை போர்த்தி வைத்தியரைக் கௌரவித்தனர்.